Wednesday, October 15, 2008

உடல், உடலின் இயக்கம், செயல்படும் விதம்

உடல், உடலின் இயக்கம், செயல்படும் விதம் உடல் என்பது பல கோடி செல்களால் ஆனது. இந்த செல்கள் ஒன்றை ஒன்று தக்க விகிதத்தில் பிடித்து இழுத்துக் கொண்டு இருப்பதால் இந்த உடல் அணு அடுக்கு மாறுபடாமல் இருக்கிறது. உடலின் வலு குறைந்தால் அணு அடுக்கு மாறுபட்டால் உடல் நோயையோ,மரணத்தையோ சந்திக்கும் இதிலே உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது இப்போது நாம் உண்ணும் உணவு 7 தாதுக்களாக மாற்றம் பெறுகிறது. இரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மச்சை, சூக்கிலம் (வித்து,நாதம்) இப்படித்தான் ஒவ்வெரு தாதுக்களாக பிரிக்கபடுகிறது. இதிலே கடைசியாக பிரித்து எடுக்க படுகின்ற தாது சூக்கிலம் எனப்படும். சூக்கிலம் சக்தியை மையமாக கொண்டுதான் உயிர் உடலுக்குள் இயங்குகிறது. இரத்த சூக்கில சக்திதான் இன்னொரு உயிரை படைக்கும் ஆற்றலை பெற்றுள்ளது. பெரும்பாலானோர் என்ன நினைக்கிறார்கள் என்றால் பருவ வயதை அடையும் போதுதான் இந்த சூக்கிலம் என்ற சக்தி உடலில் ஏற்படுவதாக கருதுகிறார்கள் அது முற்றிலும் தவறான கருத்து. ஒரு குழந்தை பிறக்கும் போதே சூக்கில சக்தி அதன் உடலினுள் இருந்து கொண்டிருக்கிறது. அது மூன்று வயது வரை மூளையுடைய வளர்ச்சிக்காகவும் 3 முதல் 14 வரை உடல் உடைய வளர்ச்சிக்காகவும் செயல் படுகிறது. எனவே தான் 3 வயதுக்குள் ஏதாவது பாதிப்பு ஒரு குழந்தைக்கு ஏற்பட்டால் அது மூளையை உடனடியாக பாதிக்கும். அந்த பாதிப்பு நீடித்தால் குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை மூளை வளர்சி குன்றிய குழந்தையாக மாறிவிடும். இந்த சூக்கிலம் என்ற சக்தி 3 வயதுக்கு பிறகு 14 வயது வரை உடல் வளர்ச்சிக்கு முழுமையாக செயல் படுகிறது. உடல் முழுமையாக வளர்ச்சி அடைந்த பின்னர் சூக்கிலம் என்ற (வித்து,நாதம்) வித்து கமலபையில் அதாவது (Sexual gland) அதில் வந்து நிரம்பபெறும். அப்படி ஆகும் போது தான் பெண்ணோ, ஆண்ணோ, பருவ வயதை அடைகிறார்கள். இந்த சூக்கிலம் என்கிற ஜீவ வித்துக்குழம்பு வாழ்க்கையில் மிகவும் அடிப்படையாக அமைந்துள்ளது. அதை பற்றி சிறிது பார்ப்போம்.
1. Physical body (பரு உடல்)
2. Sexual vital (ஜீவ வித்து குழம்பு)
3. Life Force (உயிர்ச் சக்தி)
4. Bio-magnetism(ஜீவ காந்தம்)
5. Mind (மனம்)
இந்த ஐந்தின் ஒரு சேர இயக்கமே மனிதன் என்கிற வடிவமாகும். பரு உடல் என்பது கோடி கணக்கான சிற்றறைகள் ( Cells) சேர்ந்து இயங்கும் இயக்கமே. சிற்றறைக்கு இரு புறமும் காந்த கவர்ச்சி உண்டு. காந்த கவர்ச்சி என்பது ஜீவகாந்தம் ஆகும். இது உயிர்ச்சக்தி உடலுக்குள் சுழன்று இயங்குவதால் எழும் அலையாகும்.ஓர் உடலில் உள்ள உயிர்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஜீவகாந்த அழுத்தம் நிலைபெறும். போதிய ஜீவகாந்தம் இருக்கும் வரையில் தான் உடலில் உள்ள சிற்றறைகளின் அடுக்கு குலையாமல் நிலைத்து இருக்கும். இரத்த ஓட்டம், காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம் இம்மூன்றும் சிதறாது ஒழுங்காக ஓடி, உயிருக்கும் உடலுக்கும் இடையே உள்ள உறவை நிலைக்கச் செய்யும். எனவே உடலைத்தாங்க ஜீவகாந்தம் போதிய அளவு தேவை. ஜீவகாந்தத்தைப் பெருக்க வேண்டுமெனில், அதற்கு வேண்டிய எண்ணிக்கையுள்ள உயிர்த்துகள்கள் தேவை.உயிர்த்துகள்களோ விந்துநாத திரவத்தின் அளவையும், தன்மையையும் பொறுத்திருக்கும். போதிய அளவு விந்து (ஆண் வித்து) அல்லது நாதம் (பெண் வித்து) இருந்தால் தான் உடலை நடத்தப் போதுமான ஜீவகாந்த சக்தியை உற்பத்தி செய்யும் அளவுக்கு உடலில் உயிர்ச்சக்தித் துகள்கள் நிலைத்திருக்கும். இந்த வகையில் பார்க்கும் போது (விந்து, நாதம்) என்கிற சூக்கில சக்தியின் பெருமையை புரிந்து கொள்ள முடியும்.

Thursday, September 25, 2008

வலி, நோய், மரணம்

இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் என்ற முன்றில் ஒன்று ஏதாவது ஒரு காரணத்தால் தடைப்பட்டாலும் திசை மாறினாலும், வெறியேறினாலும், அளவில் குறைந்தாலும், ஓட்டத்தில் குழப்பம் அடைந்தாலும் அந்த இடத்தில் அனு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும்.ஓர் ஓட்டத்தில் தடை ஏற்பட்டாலும், மற்ற இரண்டு ஓட்டங்களிலும் தடை உண்டாகும். அங்கு மின்குறுக்கு ஏற்படும். இந்த தடை அல்லது தேக்கமே வலியாக உணரப்படுகிறது.இந்த தடை சிறிது நேரம் நீடிக்கும் போது அது "வலி".இந்த வலி இடத்தால் விரிந்தும், காலத்தால் நீடித்தும் இருக்கும் போது அது "நோய்" எனப்படுகிறது.பொதுவாக வலி ஏற்பட்டவுடனேயே அதை சரி செய்வதற்கு உயிர்த்துகள்கள் தடை ஏற்பட்ட இடத்திற்கு வரும். தற்சுழற்சி வேகம் அதிகம் கொண்டு அதிக சிவகாந்த ஆற்றலை தந்து அந்த வலியை சிறிது நேரத்திலேயே போக்கி விடும். இயற்கையாகவே உடலைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இத்தன்மை உயிர்த்துகளுக்கும் மாறி மின்குறுக்கு ஏற்படும் போது தான் வலி நோயாக மாறுகிறது. சீவகாந்த இருப்பை அதிகம் சேமித்து வைத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கும்.அதற்கும் மேலாக உடலில் உள்ள ஆற்றல் வெகுவாக குறைந்து ஈடு செய்ய முடியாத நிலையில் உடலின் இயக்கங்கள் நின்று விடுவதே "மரணம்" எனப்படுகிறது.விந்துநாதக் கலயத்தில் மின்குறுக்கு ஏற்பட்டு அது உடைந்து விந்துநாதம் முழுவதுமே வெளியேறி விடுவதே மரணமாகும்.உடலிலுள்ள எந்த உறுப்பிலும் எந்த நோய் இருந்தாலும் அந்த இடம் உடலிலுள்ள சீவகாந்த ஆற்றலை வீணாக்கும் ஓட்டையாகி விடுகிறது. ஒரு நோயினால் சீவகாந்தத்தின் வெளியேற்ற அளவுக்கு ஏற்ப நிமிடங்களிலோ, மணிக்கணக்கிலோ, சில நாட்களிலோ, மாதங்களிலோ, ஆண்டுகளிலோ உடலிலுள்ள காந்த ஆற்றல் முழுவதுமே வரண்டு போகலாம். அதன் விளைவாக இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம்,காற்றோட்டம் ஆகியவை சீர்கெட்டு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து விடுவதால் மரணம் ஏற்படும்.

Monday, August 25, 2008

கர்ப்பகாலப் பொறுப்புகள்

குடும்ப வாழ்வில் பொறுப்பேற்றுள்ள கணவன்-மனைவி இருவரும் கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சியை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில், தம்பதிகள் போதைப் பொருள் உபயோகித்து உடலுறவு கொண்டாலும், முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் உருவாகிவரும் குழந்தையின் உறுப்புகள் அதன் விளைவாகத் தாக்கப் பெறும். செயல் விளைவு நீதி அடிப்படையில் பெற்றோர்களின் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் இவற்றால் கருவில் வளரும் குழந்தையின் உறுப்புகள் நலிவுறும்.

மேலும் கர்ப்ப காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு மனதில் துன்பமோ, அச்சமோ அளிக்கும்படி எவரும் நடந்து கொள்ளக் கூடாது. குழந்தை உருவாகும் போதே தாய்-தந்தை இருவரின் கருமையப் பதிவுகள் குழந்தைக்குச் சொந்தமாகிவிடும். அதோடு, கருப்பையில் குழந்தை வளரும் காலத்திலும், பிறந்தபின் அதனை வளர்க்கும் முறையில், ஏற்படும் விளைவுகளும் குழந்தையின் உடல் நலத்தையும், மனவளத்தையும் தக்கபடி அமைத்துக் கொடுக்கும்.

நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று கணவனும், மனைவியும் விரும்புவது இயல்பு. அதற்கேற்றவாறு அவர்கள் கடமையை ஆற்றாவிட்டால், எவ்வாறு நல்ல குழந்தையை அடைவது? ஒரு குழந்தையின் உடல் நலமும், மனவளமும் பெற்றோர்களுக்கு மட்டும் உரிமையானவையல்ல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினரே.

உயிரும் மனமும்

உலகில் பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான்.

வாழ்வின் நோக்கத்திற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால், அது துன்பம் தான் தரும். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம். பொதுவாக, நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே தவறுகள் செய்யப்படுகின்றன. அதிலும் சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் செய்யப்படும் தவறுகளே மிகுதியாக உள்ளன. மனம் புலன் கவர்ச்சியிலேயே நிற்கும்போதும், சூழ்நிலைக் கவர்ச்சியிலேயே நிற்கும் போதும் பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும்போதும் பெரும்பாலும் தவறுகள் தெரிவதில்லை.

இதனால் வந்த வேலை, பிறவியின் நோக்கம் மறந்து போகின்றன. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலான அறுகுணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இதன் விளைவாகப் பஞ்ச மகா பாதகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதைப் பார்க்கிறோம்.

தவறிழைப்பது மனம். இனித் தவறு செய்துவிடக் கூடாது எனத் தீர்மானிப்பதும் அதே மனம். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனமே.

ஆன்மாவின் மூன்று நிலைகள்

காமதேனு : தேனு என்பது பசு. ஆன்மீக உலகில் பசு என்ற சொல் ஆன்மாவைக் குறிக்கும். காமம் என்பது இச்சையைக் குறிக்கும் சொல். காமதேனு எனில் இச்சையை இயல்பாக உடைய ஆன்மா என்று பொருள். உடல் வரையில் எல்லை கட்டிப் புலன்கள் வழியே புறப்பொருள் கவர்ச்சியால் ஈர்க்கப் பெற்று ஆன்மா செயல்புரியும்போது விளைவுகள் பெரும்பாலும் சலிப்பும், துன்பமும் தரும். இவ்வகையில் இச்சைக்கே ஆன்மாவின் ஆற்றல் பயன்படும். முதல் கட்டம் காமதேனு.

கற்பகம் : கற்பு+அகம் என்ற சொற்களின் இணைப்புத் தான் கற்பகம். இங்கு ஆன்மா உயிர் வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றும் தகுதி பெற்ற நிலை இச்சித்து. இச்சித்து, துய்த்துத் துய்த்துச் சலிப்பும் துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்துத் தன்னடக்கம் உண்டாகி உயிர்நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றும் தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன்தேவை, பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதிபெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும், ஒழுக்கமும் பெற்ற ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர்நிலை தான் கற்பு+அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.

சிந்தாமணி : சிந்தை மணியான நிலை. அதாவது சலனமற்று, புலனடக்கம் பெற்று, உறுதி பெற்ற நிலை. தன் உயிர்நிலை உணர்ந்த பின் அங்கு கிட்டிய ஆற்றலால் உயிருக்கு மூல நிலை அறியும் ஆர்வம் எழுகின்றது. சிந்தனை உயர்ந்து உயிர் விரைவைச் சிறிது சிறிதாகத் தவத்தின் மூலம் குறைத்துக் கொண்டே போய் முடிவாகத்தான் இயக்கமற்ற அமைதி நிலையைப் பெறுகின்றது. மெய்ப் பொருளாகி விடுகின்றது. தனது இருப்பு நிலை அணு முதற்கொண்டு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பாலுள்ள பெருவெளி வரையில் நிறைந்து இருக்கும் பெருமையினை உணர்ந்து கொள்கின்றது.

தேவைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள தெய்வீகத் தொடர்பும் அதன் ஒழுங்கமைப்பும் உணர்ந்து ஆன்மா முழு அமைதி பெறுகின்றது. இந்த நிலைதான் சிந்தாமணி. இதுதான் மனிதனின் முழுமைப்பேறு. இதற்கு ஆன்மா தன்னையறிய வேண்டும். அப்போது தான் அமைதி பிறக்கும்.

மனதின் மூன்று நிலைகள்

உயிரின் படர்க்கை நிலையில் மனம் இயங்கும் நிலைகளை மூன்றாகப் பிரித்துக் காணலாம். அதாவது மேல்மனம் அல்லது புறமனம், நடுமனம், அடிமனம் என்ற மூன்று நிலைகளாகும். இதில் அடிமனத்திற்கும், புறமனத்திற்கும் தொடர்புபடுத்தி இருப்பது நடுமனமாகும். இதில் நடுமனம் தான் மிகவும் முக்கியமானது.

உணர்தல், துய்த்தல், கணித்தல், சிந்தித்தல், பதிவு கொள்ளல் என்ற ஐவகைச் செயல்களைக் கொண்ட மனமானது தேவை, பழக்கம், சூழ்நிலை, சந்தர்ப்பம் இவற்றால் புலன்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு செயல்புரியும்போது அச்செயல் பதிவுகள் அதனதன் அழுத்தத்திற்கேற்ப மேல்மனம் அல்லது புறமனம் (Conscious mind) நடுமனம் (Sub-Conscious mind) அடிமனம் (Super Conscious mind) என்ற மூன்றிலும் பதிவுகள் ஏற்படுகின்றன.

தொழில் செய்வதால் உடல் கருவிகளுக்கு ஏற்படும் திறனே இந்திரியப் பதிவு (ஞானகர்மேந்திரியப் பதிவுகள்). இப்பதிவுகளை ஒட்டிய மன இயக்கம் மேல் மனம் அல்லது புறமனமாகும்.

தொழில் செய்வதால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் மூளையில் பதிவாகிறது. இதுதான் நடுமனம்.

இவைகள் அனைத்தும் சூக்குமமாக வித்து அணுத்திரளில் பதிவாகி விடுகின்றன. இதுவே அடிமனம்.

எதையும் சாதிக்கலாம்

ஆசைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் செயலாக்கத் திட்டமிட வேண்டும். முதலில் எதை எடுத்துக் கொள்ளலாம் என ஆராய்ந்து நிதானமாக அதற்கு மட்டும் திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும். ஒரு சமயத்தில் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தினால் (Focussing attention on one thing at a time) வெற்றி நிச்சயம்.

நிறைவு செய்ய முடியாத நூறு ஆசைக் குப்பைகளை மனதில் சேர்த்து வைத்துக் கொண்டு திணறுவதில் யாருக்கு என்ன லாபம்; மன அமைதி முதலில் போயிற்று, மனதின் பலம் போயிற்று. செயல் திறன் போயிற்று, நற்குணங்கள் போயின, எரிச்சலும் கோபமும் அடிக்கடி வந்தன. முகத்தில் தெளிவு போய் சோகம் படிந்தது.

ஆனால், இந்தத் தற்சோதனை வெற்றி அடைந்த பின் பார்த்தால் மனம் கலகலப்பாக இருக்கிறது. நெஞ்சில் தைரியம் வந்துவிட்டது. எதையும் சாதித்துவிடலாம் என்ற உற்சாகம் மிகுந்து இருக்கிறது. மனத்தின் குறுகல் ஒழிந்து விசாலம் வந்துவிட்டதால் பொறுமை, அன்பு என்ற பல நற்குணங்கள் மிகுந்து இருக்கின்றன. எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கிறது.

முன்பின் பிறவிகள்

ஒரு மனிதனின் முற்பிறவிகளை அறிய வேண்டுமானால், அவன் உருவத்திற்கு மூலமான விந்துநாதத் தொடர்பை யூகத்தால் பற்றிக் கொண்டே பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

அந்தத் தொடர்பு பல்லாயிரக்கணக்கான உருவ வேறுபாடுகளையுடைய ஜீவராசிகளாகக் காட்சியளிக்கும். அத்தனை ஜீவராசிகளின், உடலியக்கம், அறிவியக்கம் இவைகளை அடக்கமாகப் பெற்றவனே ஒவ்வொரு மனிதனும்.

பின்னோக்கிச் செல்லும் உருவப் பரிணாமத் தொடர்பு, பல ஜீவராசிகளையும் தாண்டிப்போய் இறுதியாகப் பரமாணுவிலேயே முடிவு பெறும். அங்கிருந்து முன்னோக்கிப் பார்த்தால், எல்லா ஜீவராசிகளும், தோற்றப் பொருட்களும், ஒரே மூலத்தை அடிப்படையாகக் கொண்டு விரிந்து, பிரிந்து தொடர்ந்து இயங்கும் ஒரு அகண்ட பேரியக்கம் அறிவுக்குக் காட்சியாகும்

ஒரு மனிதனின் பின்பிறவிகளை அறிய வேண்டுமானால், அவை அவன் விந்துவின் மூலம் தோன்றும் மக்களும் அம்மக்களின் மூலம் தொடர்ந்து தோன்றும் மக்களுமேயாவர்.

ஆதி அல்லது அகண்ட சக்தி, அணு, அறிவு என்ற மூன்று நிலைகளைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்த விளக்கம் மிகத் தெளிவாக இருக்கும். மற்றவர்கள் பொறுமையோடு பலதடவை சிந்தித்தே அறிய வேண்டும்.

கருமையச் சிறப்பு

வேதான் விண்துகள், கோள்கள், உயிர் வகைகள் அனைத்திலும், மனிதனிடம் அமைந்துள்ள 'கருமையம்' எல்லையற்ற ஆற்றலுடையது. மொழிவழியில் இதனை "சூப்பர் கம்ப்யூட்டர் சிப்" எனலாம். எங்கு ஒரு துளி மழை பெய்தாலும், அது நிலத்தில் விழுந்து சிறு ஓடையாகி, ஆறாகி, கடலில் கலந்து விடுவது போல, பேரியக்க மண்டலத்தில் - ஆதிநிலை முதல் பரமாணு, பஞ்சபூதங்கள், பஞ்சதன்மாத்திரை, அண்டங்கள், ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்கள் மனிதன் வரையில் நடைபெற்ற எல்லா இயக்கங்களும், 'காந்த அலைகளே'. ஆதலால், அவையனைத்தும் இறுகிய பதிவுகளாகத் தொடர்ந்து வந்து மனிதனிடம் இருப்பாற்றல்களாக (Potential) உள்ளன.

எனவே, அரூபமான எல்லையற்ற இறையாற்றலின் அலைவடிவிலான இயக்கங்கள் அனைத்தும், உருவத் தோற்றங்களில், சிறப்பான மனிதனிடம் உள்ள 'கருமையத்தில்' அடங்கியுள்ளன. எனவே, மனிதனிடம் அமைந்துள்ள கருமையம், இறைநிலையின் பேரியக்க மண்டலம் பரிணாம இரகசியங்கள் அனைத்துமடங்கிய "சூப்பர் கம்ப்யூட்டர் சிப்" என்று கொள்ளலாம். இத்தகைய இயக்கப் பதிவுகள் அவ்வப்போது பேரியக்க மண்டல விரிவான தொடர்பாக இருப்பது போன்று, ஆதிநிலையிலிருந்து பரிணாமத் தொடராகவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய 'கருமையம்' தான் மனிதன் அறிவுக்கும் மனதுக்கும் இருப்பிடமாக - இயக்கக் களமாகவும் இருக்கின்றது.

விலங்கினப் பதிவு

ஐயறிவு வரையில் பரிணாமமடைந்த உயிரினங்களுக்கு உணவு உற்பத்தி செய்துண்டு வாழத் தெரியாது. அதனால், தாவர இனம் தவிர மற்ற உயிரினங்கள் வேறு உயிரினங்களைக் கொன்று, உண்டு வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனித இனம் ஐயறிவுடைய விலங்கினத்தின் வித்துத் தொடராகவே பரிணாமமடைந்துள்ளது. இதனால், மனிதனிடத்தில் ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள எல்லா உயிரினங்களின் தேவையுணர்வு, செயல்முறைகள், வாழ்க்கை வழி அனைத்தும் மரபுவழிப் பதிவுகளாக (Hereditary Characters) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விலங்கினத்தின் வாழ்வில் உள்ள மூன்று விதமான செயல்பதிவுகளை மனித இனத்தில் அடையாளம் காணலாம். அவை :-

1. பிற உயிரைக் கருணையின்றித் துன்புறுத்துதல் அல்லது கொலை செய்தல்.

2. மற்ற உயிர்களின் உடலைப் பறித்து உண்ணுதல்.

3. மற்ற உயிர்களின் வாழும் சுதந்திரத்தைத் தன் முனைப்பிலான அதிகாரத்தாலோ, தன்
இன்பத்துக்காகவோ பறித்தல்.

என்பதாகும். இம்மூன்றையும் சுருக்கமாக உயிர்க்கொலை, பொருள் பறித்தல் (திருட்டு), சுதந்திரம் பறித்தல் என்ற மூன்று குற்றங்களாகக் கொள்ளலாம். இம்மூன்று செயல்களும் விலங்கினத்திற்குக் குற்றமாகா. அவற்றிற்கு ஒத்தவை; ஏற்றவை. ஏனெனில், அவற்றிற்கு உணவு உற்பத்தி செய்து உண்டு வாழத் தெரியாது. ஆனால், உழைத்துப் பொருள் ஈட்டிப் பகிர்ந்துண்டு இன்புறும் மனித வாழ்வில் இந்த மூன்று குற்றங்கள் தான் எல்லா வகையான துன்பங்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணங்கள். விலங்கினப் பதிவுகளை நீக்கிச் சிக்கலின்றி வாழ்வோம்.