Monday, August 25, 2008

உயிரும் மனமும்

உலகில் பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான்.

வாழ்வின் நோக்கத்திற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால், அது துன்பம் தான் தரும். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம். பொதுவாக, நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே தவறுகள் செய்யப்படுகின்றன. அதிலும் சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் செய்யப்படும் தவறுகளே மிகுதியாக உள்ளன. மனம் புலன் கவர்ச்சியிலேயே நிற்கும்போதும், சூழ்நிலைக் கவர்ச்சியிலேயே நிற்கும் போதும் பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும்போதும் பெரும்பாலும் தவறுகள் தெரிவதில்லை.

இதனால் வந்த வேலை, பிறவியின் நோக்கம் மறந்து போகின்றன. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலான அறுகுணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இதன் விளைவாகப் பஞ்ச மகா பாதகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதைப் பார்க்கிறோம்.

தவறிழைப்பது மனம். இனித் தவறு செய்துவிடக் கூடாது எனத் தீர்மானிப்பதும் அதே மனம். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனமே.

No comments: