Monday, August 25, 2008

கருமையப் பதிவுகள்

ஒரு மயிலைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த மயிலின் உருவம் பார்ப்பவர்களின் கண்களுக்கு வரும்போது அந்தக் கண்களில் மிகச்சிறிய உருவமாக பிரதிபலிக்கிறது. இப்படிச் சுருக்கம் பெற்ற மயிலின் உருவமானது எப்போது மூளை செல்களில் மோதுகிறதோ அப்போது அந்த மூளைச் செல்கள் அதைப் பதிவு செய்து கொள்கின்றன. எப்படி ஒரு ஒலியானது பதிவு நாடாவில் பதிவு செய்யப்படுகிறதோ அதே போல மயிலின் உருவமானது அந்த மயிலைப் பற்றிய தன்மைகள் எல்லாம் அடங்கிய அழுத்த அலையாகச் சுருங்கிப் புள்ளி வடிவில் பதிவாகிறது.

மூளைச் செல்களுக்கு வந்து சேருகிற எந்த அலையானாலும் அது உடனே கருமையத்தால் ஈர்க்கப்பட்டு, உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலின் காரணமாக இருப்பாக வைக்கப்படுகிறது. மயிலைப் பார்த்து உணர்ந்த அனுபவத்திற்கு ஏற்பப் பார்ப்பவருடைய கருமையமானது தன்மை பெறுகிறது. பின்னர் எப்பொழுதேனும் தேவையின் காரணமாகவோ, வேறு தூண்டுதல் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ மன அலைக்கு அதே அலை வரிசை ஏற்படும் போது, மூளைச் செல்கள் ஏற்கனவே அந்த அலை வரிசையில் விளைந்த பதிவுகளை விரித்துக் காட்டும். அப்படி விரித்துக் காட்டப்படும்போது பார்ப்பவர் பழைய அனுபவங்களையும், உணர்வுகளையும் எண்ணங்களாக நினைவு கூர்ந்திட முடியும். அதே தன்மையில் உணர்வின்பாற்பட்ட அலைகளும், எண்ண அலைகளும், பரு உடலில் ஏற்படும் அனுபவங்களால் விளையும் அலைகளும் கருமையத்துக்கு ஈர்க்கப்பட்டு இருப்பாக வைக்கப்படுகின்றன.

No comments: