Monday, August 25, 2008

மனதின் மூன்று நிலைகள்

உயிரின் படர்க்கை நிலையில் மனம் இயங்கும் நிலைகளை மூன்றாகப் பிரித்துக் காணலாம். அதாவது மேல்மனம் அல்லது புறமனம், நடுமனம், அடிமனம் என்ற மூன்று நிலைகளாகும். இதில் அடிமனத்திற்கும், புறமனத்திற்கும் தொடர்புபடுத்தி இருப்பது நடுமனமாகும். இதில் நடுமனம் தான் மிகவும் முக்கியமானது.

உணர்தல், துய்த்தல், கணித்தல், சிந்தித்தல், பதிவு கொள்ளல் என்ற ஐவகைச் செயல்களைக் கொண்ட மனமானது தேவை, பழக்கம், சூழ்நிலை, சந்தர்ப்பம் இவற்றால் புலன்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு செயல்புரியும்போது அச்செயல் பதிவுகள் அதனதன் அழுத்தத்திற்கேற்ப மேல்மனம் அல்லது புறமனம் (Conscious mind) நடுமனம் (Sub-Conscious mind) அடிமனம் (Super Conscious mind) என்ற மூன்றிலும் பதிவுகள் ஏற்படுகின்றன.

தொழில் செய்வதால் உடல் கருவிகளுக்கு ஏற்படும் திறனே இந்திரியப் பதிவு (ஞானகர்மேந்திரியப் பதிவுகள்). இப்பதிவுகளை ஒட்டிய மன இயக்கம் மேல் மனம் அல்லது புறமனமாகும்.

தொழில் செய்வதால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் மூளையில் பதிவாகிறது. இதுதான் நடுமனம்.

இவைகள் அனைத்தும் சூக்குமமாக வித்து அணுத்திரளில் பதிவாகி விடுகின்றன. இதுவே அடிமனம்.

எதையும் சாதிக்கலாம்

ஆசைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் செயலாக்கத் திட்டமிட வேண்டும். முதலில் எதை எடுத்துக் கொள்ளலாம் என ஆராய்ந்து நிதானமாக அதற்கு மட்டும் திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும். ஒரு சமயத்தில் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தினால் (Focussing attention on one thing at a time) வெற்றி நிச்சயம்.

நிறைவு செய்ய முடியாத நூறு ஆசைக் குப்பைகளை மனதில் சேர்த்து வைத்துக் கொண்டு திணறுவதில் யாருக்கு என்ன லாபம்; மன அமைதி முதலில் போயிற்று, மனதின் பலம் போயிற்று. செயல் திறன் போயிற்று, நற்குணங்கள் போயின, எரிச்சலும் கோபமும் அடிக்கடி வந்தன. முகத்தில் தெளிவு போய் சோகம் படிந்தது.

ஆனால், இந்தத் தற்சோதனை வெற்றி அடைந்த பின் பார்த்தால் மனம் கலகலப்பாக இருக்கிறது. நெஞ்சில் தைரியம் வந்துவிட்டது. எதையும் சாதித்துவிடலாம் என்ற உற்சாகம் மிகுந்து இருக்கிறது. மனத்தின் குறுகல் ஒழிந்து விசாலம் வந்துவிட்டதால் பொறுமை, அன்பு என்ற பல நற்குணங்கள் மிகுந்து இருக்கின்றன. எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கிறது.

முன்பின் பிறவிகள்

ஒரு மனிதனின் முற்பிறவிகளை அறிய வேண்டுமானால், அவன் உருவத்திற்கு மூலமான விந்துநாதத் தொடர்பை யூகத்தால் பற்றிக் கொண்டே பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

அந்தத் தொடர்பு பல்லாயிரக்கணக்கான உருவ வேறுபாடுகளையுடைய ஜீவராசிகளாகக் காட்சியளிக்கும். அத்தனை ஜீவராசிகளின், உடலியக்கம், அறிவியக்கம் இவைகளை அடக்கமாகப் பெற்றவனே ஒவ்வொரு மனிதனும்.

பின்னோக்கிச் செல்லும் உருவப் பரிணாமத் தொடர்பு, பல ஜீவராசிகளையும் தாண்டிப்போய் இறுதியாகப் பரமாணுவிலேயே முடிவு பெறும். அங்கிருந்து முன்னோக்கிப் பார்த்தால், எல்லா ஜீவராசிகளும், தோற்றப் பொருட்களும், ஒரே மூலத்தை அடிப்படையாகக் கொண்டு விரிந்து, பிரிந்து தொடர்ந்து இயங்கும் ஒரு அகண்ட பேரியக்கம் அறிவுக்குக் காட்சியாகும்

ஒரு மனிதனின் பின்பிறவிகளை அறிய வேண்டுமானால், அவை அவன் விந்துவின் மூலம் தோன்றும் மக்களும் அம்மக்களின் மூலம் தொடர்ந்து தோன்றும் மக்களுமேயாவர்.

ஆதி அல்லது அகண்ட சக்தி, அணு, அறிவு என்ற மூன்று நிலைகளைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்த விளக்கம் மிகத் தெளிவாக இருக்கும். மற்றவர்கள் பொறுமையோடு பலதடவை சிந்தித்தே அறிய வேண்டும்.

கருமையச் சிறப்பு

வேதான் விண்துகள், கோள்கள், உயிர் வகைகள் அனைத்திலும், மனிதனிடம் அமைந்துள்ள 'கருமையம்' எல்லையற்ற ஆற்றலுடையது. மொழிவழியில் இதனை "சூப்பர் கம்ப்யூட்டர் சிப்" எனலாம். எங்கு ஒரு துளி மழை பெய்தாலும், அது நிலத்தில் விழுந்து சிறு ஓடையாகி, ஆறாகி, கடலில் கலந்து விடுவது போல, பேரியக்க மண்டலத்தில் - ஆதிநிலை முதல் பரமாணு, பஞ்சபூதங்கள், பஞ்சதன்மாத்திரை, அண்டங்கள், ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்கள் மனிதன் வரையில் நடைபெற்ற எல்லா இயக்கங்களும், 'காந்த அலைகளே'. ஆதலால், அவையனைத்தும் இறுகிய பதிவுகளாகத் தொடர்ந்து வந்து மனிதனிடம் இருப்பாற்றல்களாக (Potential) உள்ளன.

எனவே, அரூபமான எல்லையற்ற இறையாற்றலின் அலைவடிவிலான இயக்கங்கள் அனைத்தும், உருவத் தோற்றங்களில், சிறப்பான மனிதனிடம் உள்ள 'கருமையத்தில்' அடங்கியுள்ளன. எனவே, மனிதனிடம் அமைந்துள்ள கருமையம், இறைநிலையின் பேரியக்க மண்டலம் பரிணாம இரகசியங்கள் அனைத்துமடங்கிய "சூப்பர் கம்ப்யூட்டர் சிப்" என்று கொள்ளலாம். இத்தகைய இயக்கப் பதிவுகள் அவ்வப்போது பேரியக்க மண்டல விரிவான தொடர்பாக இருப்பது போன்று, ஆதிநிலையிலிருந்து பரிணாமத் தொடராகவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய 'கருமையம்' தான் மனிதன் அறிவுக்கும் மனதுக்கும் இருப்பிடமாக - இயக்கக் களமாகவும் இருக்கின்றது.

விலங்கினப் பதிவு

ஐயறிவு வரையில் பரிணாமமடைந்த உயிரினங்களுக்கு உணவு உற்பத்தி செய்துண்டு வாழத் தெரியாது. அதனால், தாவர இனம் தவிர மற்ற உயிரினங்கள் வேறு உயிரினங்களைக் கொன்று, உண்டு வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனித இனம் ஐயறிவுடைய விலங்கினத்தின் வித்துத் தொடராகவே பரிணாமமடைந்துள்ளது. இதனால், மனிதனிடத்தில் ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள எல்லா உயிரினங்களின் தேவையுணர்வு, செயல்முறைகள், வாழ்க்கை வழி அனைத்தும் மரபுவழிப் பதிவுகளாக (Hereditary Characters) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விலங்கினத்தின் வாழ்வில் உள்ள மூன்று விதமான செயல்பதிவுகளை மனித இனத்தில் அடையாளம் காணலாம். அவை :-

1. பிற உயிரைக் கருணையின்றித் துன்புறுத்துதல் அல்லது கொலை செய்தல்.

2. மற்ற உயிர்களின் உடலைப் பறித்து உண்ணுதல்.

3. மற்ற உயிர்களின் வாழும் சுதந்திரத்தைத் தன் முனைப்பிலான அதிகாரத்தாலோ, தன்
இன்பத்துக்காகவோ பறித்தல்.

என்பதாகும். இம்மூன்றையும் சுருக்கமாக உயிர்க்கொலை, பொருள் பறித்தல் (திருட்டு), சுதந்திரம் பறித்தல் என்ற மூன்று குற்றங்களாகக் கொள்ளலாம். இம்மூன்று செயல்களும் விலங்கினத்திற்குக் குற்றமாகா. அவற்றிற்கு ஒத்தவை; ஏற்றவை. ஏனெனில், அவற்றிற்கு உணவு உற்பத்தி செய்து உண்டு வாழத் தெரியாது. ஆனால், உழைத்துப் பொருள் ஈட்டிப் பகிர்ந்துண்டு இன்புறும் மனித வாழ்வில் இந்த மூன்று குற்றங்கள் தான் எல்லா வகையான துன்பங்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணங்கள். விலங்கினப் பதிவுகளை நீக்கிச் சிக்கலின்றி வாழ்வோம்.

மெளனம்

நாம் கருத்தொடராகப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப்பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.

ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களைக் கணக்கெடுப்பது போல எல்லோருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுங்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மெளன நோன்பு அவசியம்.

இந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும், கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டத்தால் ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மெளன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்மத் தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.

கருமையப் பதிவுகள்

ஒரு மயிலைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த மயிலின் உருவம் பார்ப்பவர்களின் கண்களுக்கு வரும்போது அந்தக் கண்களில் மிகச்சிறிய உருவமாக பிரதிபலிக்கிறது. இப்படிச் சுருக்கம் பெற்ற மயிலின் உருவமானது எப்போது மூளை செல்களில் மோதுகிறதோ அப்போது அந்த மூளைச் செல்கள் அதைப் பதிவு செய்து கொள்கின்றன. எப்படி ஒரு ஒலியானது பதிவு நாடாவில் பதிவு செய்யப்படுகிறதோ அதே போல மயிலின் உருவமானது அந்த மயிலைப் பற்றிய தன்மைகள் எல்லாம் அடங்கிய அழுத்த அலையாகச் சுருங்கிப் புள்ளி வடிவில் பதிவாகிறது.

மூளைச் செல்களுக்கு வந்து சேருகிற எந்த அலையானாலும் அது உடனே கருமையத்தால் ஈர்க்கப்பட்டு, உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலின் காரணமாக இருப்பாக வைக்கப்படுகிறது. மயிலைப் பார்த்து உணர்ந்த அனுபவத்திற்கு ஏற்பப் பார்ப்பவருடைய கருமையமானது தன்மை பெறுகிறது. பின்னர் எப்பொழுதேனும் தேவையின் காரணமாகவோ, வேறு தூண்டுதல் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ மன அலைக்கு அதே அலை வரிசை ஏற்படும் போது, மூளைச் செல்கள் ஏற்கனவே அந்த அலை வரிசையில் விளைந்த பதிவுகளை விரித்துக் காட்டும். அப்படி விரித்துக் காட்டப்படும்போது பார்ப்பவர் பழைய அனுபவங்களையும், உணர்வுகளையும் எண்ணங்களாக நினைவு கூர்ந்திட முடியும். அதே தன்மையில் உணர்வின்பாற்பட்ட அலைகளும், எண்ண அலைகளும், பரு உடலில் ஏற்படும் அனுபவங்களால் விளையும் அலைகளும் கருமையத்துக்கு ஈர்க்கப்பட்டு இருப்பாக வைக்கப்படுகின்றன.

உலகக் குடும்பம்

நாம் எல்லோரும் உலகம் என்ற மண்மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கிருப்பது ஒரே சூரியன் தான். நமக்கு ஏற்படும் நீர் தேவைகளை முடிப்பதற்கு இருப்பது ஒரே கடல் தான். நாம் எல்லோரும் மூச்சு விடுவதற்கு உள்ள காற்றும் ஒன்றுதான். இவற்றில் ஒன்றைக்கூட நம்மில் எவருமே உற்பத்தி செய்தது இல்லை. நமது முன்னோர்களும் செய்ததில்லை.

எல்லாம் வல்லதாகிய இறைநிலை என்னும் இயற்கையானது தனது பூரணம், பேராற்றல், பேரறிவு என்ற மூலதனத்தைக் கொண்டும் அதன் பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் என்ற இயக்கநியதிகளைக் கொண்டும், வான் மண்டலத்தையும், உலகையும் உருவாக்கி, இந்த அழகிய வளம் நிறைந்த உலகின் மீது நம்மையும் உருவாக்கி வாழ வைத்திருக்கிறது. நமக்கு அன்னையாகவும், தந்தையாகவும் உள்ள அருட்பேராற்றலான இயற்கை நாம் அனைவரும் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ எல்லா வளங்களையும் நிறைவாக அமைத்துக் கொடுத்திருக்கிறது.

நமது சிந்தனையை உயர்த்தி இவற்றையெல்லாம் நாம் உணரும் போது நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன் பிறந்தவர்கள் என்பது சந்தேகமில்லாமல் தெரிகின்றது அல்லவா?

ஆசையும் ஞானமும்

ஆசையும் அடக்கினால் அது பிதுங்கிக் கொண்டு வேறுவேறு துன்பங்களாக உருவாகும். ஆராய்ந்தால் பிறந்த இடத்திலேயே அது ஒடுங்கும். ஆசை நிறைமனமானால் மற்ற எல்லா நலன்களையும் பெறுவது எளிதாகச் சாத்தியமாகி, வாழ்வின் இலட்சியமே நிறைவேறிய ஓர் உணர்வு உண்டாகும்.

ஆசையின் மறுமலர்ச்சியே ஆறு குணங்கள். ஆசை தடைப்படும் போது அத்தடையை நீக்க எழும் ஆர்வமே சினம். ஆசையுள்ள பொருட்களைத் தனக்கு வேண்டுமெனவும், பிறர் கவராமலும் பாதுகாத்துக் கொள்ளும் செயலே கடும்பற்று (லோபம்). ஆசை பிற பாலை நாடி எழுந்தால் அதுவே மோகம். ஆசையானது பொருள், செல்வாக்கு, புகழ் இவற்றின் மீது அழுந்தி அதைக் கொண்டு மக்களை உயர்வாக அல்லது தாழ்வாகக் கருதும் பேதம் மதம். சினத்தை முடிக்க வலுவையும், வாய்ப்பையும் நாடி நிற்கும் ஆசைதான் வஞ்சம்.

ஆசையின் இயல்பறிந்து அதை நலமே விளைவிக்கத்தக்க வகையில் பண்படுத்தி - ஒழுங்குபடுத்திவிட்டால், அதுவே ஞானமாகவும் மலரும்.

யோகிராஜ் வேதாத்திரி

Tuesday, August 5, 2008

அமைதியும், ஆன‌ந்த‌மும் உன் உள்ளா, உன‌க்கு வெளியேயா?

ம‌னித‌ன் வாழும் கால‌த்தில் தெரிந்தோ, தெரியாம‌லோ அமைதியையும், ஆன‌ந்த‌த்தையும் தேடுகிறான். அத‌ற்காக‌ வாழும் கால‌த்தில் பொருட்க‌ளை ஈட்டுகிறான். என‌க்கு இப்ப‌டி ப‌ல‌ செல்வ‌ங்க‌ள் இருந்தால் நான் அமைதியாக‌ இருப்பேன் என்று அவ‌ற்றை பெற‌ போராடுகிறான். முடிவில் அவ‌ற்றை பெற்று கொள்கிறான். ஆனால் எதை தேடினானோ அதை தேடும்போது இருந்த‌ அமைதி கூட‌ அதை பெற்ற‌ பிற‌கு பெற‌ப்ப‌ட்ட‌வ‌னிட‌ம் இல்லை. ஏன் வாழும் கால‌ம் நீடிக்க‌ நீடிக்க‌ த‌ன்னிட‌ம் இருந்த‌ அமைதியை தொலைத்து விடுகிறான். தான் தேவையான‌வ‌ற்றை பெற்று கொள்கிறான். த‌ன்னுடைய‌ வ‌ச‌திக‌ளை பெருக்கி கொள்கிறான். ஆனால் அவ‌னிட‌ம் அமைதியும், ஆன‌ந்த‌மும் வ‌ற்றி விடுகிற‌து. இத‌ற்கு கார‌ண‌ம் என்ன‌?கோவிலுக்கு செல்கிறான், அங்கே அமைதி கிடைக்கிற‌து என்று கூறுகிறான். அங்கே அமைதி கிடைக்கிற‌தா? இல்லை. அவ‌ன் அங்கே அமைதியாக‌ இருக்கிறானா? தான் த‌ன்னுடைய‌ ம‌ன‌தை அமைதியாக‌ வைக்காத‌வ‌ரை அமைதியும், ஆன‌ந்த‌மும் எதில் இருந்து கிடைக்கும் என்று வெளியே தேடிக்கொண்டு இருப்பான். ஆனால் அந்த‌ அமைதியும், ஆன‌ந்த‌மும் த‌ன்னுள் இருப்ப‌தை பார்க்க‌ தொட‌ங்கிவிட்டால், தான் என்றும் போல‌ த‌னக்கு தேவையான‌வ‌ற்றை பெருக்கி கொள்வான். ஆனால் அவ‌ற்றால் ஒரு பாதிப்பு ஏற்படாத‌வாறு த‌ன்னை பாதுகாத்து கொள்வான். அந்த‌ சூழ்நிலையில் வாழ‌ க‌ற்று கொண்டு விட்டால் வாழும் கால‌ம் அமைதியும், ஆன‌ந்த‌மும் தான். த‌ன் உள்ளே இருக்கும் அமைதியையும், ஆன‌ந்த‌த்தையும் பெற்று கொண்டு ஒரு ந‌ல்ல‌ ச‌முதாய‌த்தை உருவாக்க‌ முய‌ற்சி செய்யுங்க‌ள்.